Friday, June 19, 2009

ஸ்ரீவிருஷபாத்ரி மகாத்மியம் - முதல் அத்யாயம்எம்பெருமான் பெருந்தேவி நாயகி ஸமேத ஸ்ரீவரதராஜன் ஆசியுடன்,திருமாலிருஞ்சோலை கல்யாண சுந்தரவல்லீ ஸமேத ஸ்ரீசுந்தரராஜன்


அடி பணிந்து அவன் வைபவத்தை சொல்லும் ஸ்ரீவிருஷபாத்ரி மகாத்மியம் எனும் பழையதொரு நூலை இங்கு ஒருங்குறியில் எழுதிட உள்ளேன்..

என் அப்பன் வரதன் அருளுடன் முதல் அத்யாயத்தை தொடங்குகிறேன்.
_______________________________________________________________________________________

முதல் அத்யாயம் - ஷேத்ர வைபவம்

நைமிசாரண்யவாசிகளான மஹரிஷிகளானவர்கள் தாங்கள் காலையில் செய்ய வேண்டிய ’ஜப தப’ ஹோமாதிகளை செய்தபின் பகவத்பக்தியில் ஈடுபட்டுள்ளவர்களாய் ஒன்று கூடி, பதிணென் புராணங்களையும் வெளியிட்டவரான ஸ்ரீவேதவியாஸ மஹாமுனிவரின் சிஷ்யரும், எல்லாப் புராணங்களின் மர்மங்களையும் அறிந்த ஸ்ரீஸூத மஹாமுனிவரை அழைத்து பிரஹ்மாசனத்தில் வீற்றிருக்கச் செய்து சொல்லுகின்றனர்.

ரிஷிகள் : ”அறிவாளிகளுக்குள் சிறந்த ஸூத மஹாமுனிவரே இதற்குமுன் பல புராணங்களை தங்களிடமிருந்து கேட்டிருக்குறோம். பர்வதங்களுடைய விசேஷங்களும், ஸமுத்ரங்களின் விபரங்களும், ஏழு ஸ்தானங்களை ஆஸ்ரயித்த த்வீபங்களின் விஷயங்களும் அதிக புண்யமயமான தீர்த்தங்களின் பெருமைகளும், பெரிய நகரங்களின் அமைப்புகளும், ஸாமான்ய தர்மங்களும், மிகவும் சிரமத்தின் பேரில் செய்யக்கூடிய அனேகம் விசேஷ தர்மங்களும், ப்ரஹ்ம, ஷத்ரிய, வைஷ்ய, சூத்ரர்களுடையவும், அநுலோம, ப்ரதிலோமர்களுடைய ஸ்வரூபங்களும் அவர்களுடைய தொழிலும், ரஹஸ்யமானதும், ப்ரகாசமானதும் மற்றும் செய்யத்தக்கதும், செய்யத்தகாததும் இகபர சுகத்தைத் தரக்கூடிய தர்மங்களும், ந்யாய அந்யாயங்களின் ஸ்வரூபமும் மற்றும் செய்கைக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக்கூடிய தர்மங்களும், யாவற்றுக்கும் பிரபுவான ஸ்ரீபகவானுடைய ச்ரேஷ்டமான ஸாத்வீக புராணங்களிலிருந்து தங்களிடம் கேட்டிருக்குறோம்.

முன் வராஹபுராண வரலாற்றைச் சொல்லிவருகையில் பெருமைதங்கிய ஸ்ரீபாண்டியநாட்டில் எப்பொழுதும் பகவத் ஸாந்நித்யம் பொருந்திய ஸ்ரீ விருஷபாத்ரியின் பெருமையை சுலபமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவ்விருஷபாத்ரியின் இருப்பிடமும், அதன் மஹாத்மியமும் அறிய விரும்புகிற எங்களுக்கு ஸர்வ புராணார்த்தங்களை அறிந்த தாங்கள் உள்ளபடி விபரமாகக் கூறும்படி பிராத்திக்கின்றோம். அமுதபானம் செய்பவனுக்கு போதுமென்ற த்ருப்தி வராதது போல், தங்களுடைய முகாரவிந்தத்திலிருந்து பெருகுகிற ஸ்ரீவிஷ்ணு கதாம்ருதபானாஸக்தர்களான எங்களுடைய தாபத்தை உங்களுடைய கருணாம்ருதவர்ஷத்தினால் விலக்கி, போக மோக்ஷங்களைக் கொடுக்கும் ஷேத்ரங்களுள் உத்தம்மும், தேவர்கட்கும், மனிதர்கட்கும் சுபாஸ்தன ”ஸ்ரீவிருஷப கிரி” ஷேத்ரத்தின் மஹாத்மியத்தை கேட்க ஆவல் கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதும் பகவத்சிந்தனாபரர்களான செளநகாதி மஹாமுனிவர்களால் இவ்விதம் கேட்கப்பட்ட ஸ்ரீஸூத மஹாமுனிவர், உலகக்ஷேமங்களை விரும்பும் தங்களால் ஷாட்குண்ய பரிபூர்ணரான ”ஸ்ரீசுந்தரராஜர் நினைக்கும்படி செய்யப்பட்டார் என்று சொல்லி, ரிஷிகளுக்குள் தலைவரும், ஸ்ரீமந்நாராயணாம்சபூதரும், தனக்கு பரமாசார்யருமான ஸ்ரீவேத வியாச மஹாமுனிவரை வணங்கி பின்வருமாறு சொல்கிறார்.

தொடரும்....

Thursday, June 18, 2009

32 ரகசியங்கள்

என்ன எழுதுவதென்றே தெரியாமல் இருந்தேன்.. முதலில் என்னைப் பற்றி எழுதுமாறு கூடல் குமரன் இழுத்து விட்டுருக்கார்.. என்னைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாத்தாவோட பெயர் இது.. எங்க தாத்தா தான் தன்னோட பேரை எனக்கு வைச்சாரு.. அது மட்டுமில்லாம நான் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவன் ஆதலால் அந்த ஸ்ரீராமபிரானின் பெயராகவும் அமைந்து விட்டது... என்ன நான் கொஞ்சம் வளர்ந்து சேட்டை பண்ண ஆரம்பிச்ச பிறகு.. பாட்டி எனக்கு ராகவனு பேர் வைச்சதுக்கு பதிலா ராவணன்னு பேர் வைச்சுருக்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்க :)2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஜனவரி 26, 2008 அன்று இரவு மறுநாள் இரவு இறக்கப் போகும் எனது அப்பாவிற்காக யாருக்கும் சொல்லாமல் தெரியாமல் அழுதேன். அதற்குப் பின் எதற்கும் அழத் தோன்றியதில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு என்னிடம் ரொம்ப பிடித்ததே எனது கையெழுத்து தான்.. ஏன்னா பிடிக்கிற மாதிரி வேற ஒண்ணுமே இல்ல :)


4.பிடித்த மதிய உணவு என்ன?

சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ்,எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ம்ம்.. அவ்வளவா கிடையாது.. கொஞ்சம் நாள் ஆகனும்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில்.. வருஷா வருஷம் தவறாம குற்றாலம் போய் ஒரு வாரம் ஆட்டம் போட்டு வருவேன்.. கடல் குளியல் கொஞ்சம் அலர்ஜி..


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம்.. அழகு முகமாக இருந்தால் வேறு பக்கமே திரும்ப மாட்டேன் :)

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம் ஒவ்வொரு வருடமும் தவறாமல் எங்க ஊர் வைகாசித் திருவிழாவிற்கு வரதராஜனின் அழகைக் காணச் செல்வது.
பிடிக்காதது சோம்பல்தனம்.. :)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஹி ஹி... இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல இன்னும் காலம் வரவில்லை

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் அண்ணா பொண்ணு ஸ்ரீநிதி.. அவளுக்கு என்னையும், எனக்கு அவளையும் ரொம்ப்ப்ப்ப பிடிக்கும்.. அவளை ஸ்ரீகுட்டின்னு நான் மட்டும் தான் கூப்புடணும்னு அவளோட கண்டிஷன்.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

கருப்பு ஷார்ட்ஸ் , வெள்ளை பனியன்.


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சன் மியூசிக்கில் நகைச்சுவை காட்சிகள்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்... ரொம்ப பிடிச்ச வர்ணம்


14.பிடித்த மணம் ?

மழைக்கு முன்/பின் வரும் மண் வாசம் பிடிக்கும்..
பழைமையான கோவில் கருவறைகளின் வாசம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தையும், தேசிகர் அருளிச்செயல்களையும் அறிமுகப்படுத்திய எனது அருமை அண்ணா.. வீர வைஷ்ணவர்.. பரவஸ்து சுந்தர் அண்ணா..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

குமரனின் அனைத்து பதிவுகளுமே பிடிக்கும்.. அவரின் அழகிய தமிழுக்காகவே பிடிக்கும்.. குறிப்பாக அவர் தரும் பாசுர விளக்கங்கள்.


17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்.. முந்தி ரொம்ப வெறியா இருந்தேன்.. இப்போ தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி

18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம்.. -6 :(

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும். ரஜினி படங்கள் அனைத்தும் பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

99 ஹிந்திப் படம்.. 2.30 மணிநேரம் சிரித்து விட்டு வந்தேன்

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர் காலம்.. மார்கழிக் குளிர்னா ரொம்ப பிடிக்கும்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

SCSI Bench Reference :)

23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி மாத்துவேன்.. ஆனா அதுவும் பெருமாள் படமா தான் இருக்கும்... பார்த்தனும், அரங்கனும், வரதனும் தான் மாறி மாறி வருவர்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ரயில் போகும் சத்தம் ரொம்ப பிடிக்கும்..
பெங்களுர் சாலையில் ட்ராபிக் ஹாரன் சத்தம் பெரும் இம்சை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மயாமி பீச், அமெரிக்கா.


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சில திறமைகள் இருக்கு.. ஆனா தனித்திறமைன்னு சொல்ல முடியாது

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தன்னை விட எளியவர்களை துன்புறுத்துதல்..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பல் தனம் தான்.. அதனாலே பெரிதாக சாதிக்க முடியவில்லை.. :(

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பாரிஸ்.. போகணும்னு ரொம்ப நாளா ஆசை.. :)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எதை பற்றியும் கவலை படாமல் எந்தக் கவலையும் இல்லாம இருக்கணும்னு ஆசை

31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

கல்யாணம் ஆனபின் சொல்றேனே..

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை அழகானது.